#Chennai | கல்லூரி மாணவி கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அக்.13ம்தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக சத்யபிரியா…

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்.13ம்தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக சத்யபிரியா என்ற மாணவி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, சதீஷ் என்ற இளைஞர் சத்யபிரியாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். மகள் இறந்த துக்கத்தில் சத்யபிரியாவின் தந்தையும் மரணமடைந்தார். ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக தகவல் வெளியானது.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த 27ம் தேதி சதீஷை குற்றவாளி என நீதிமன்றம் கூறியது. தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 30ம் தேதி (இன்று) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.