சென்னை மாநகராட்சியில் மீண்டும் வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒருநாளைக்கு 100, 120 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த மார்ச் முதல் வாரத்திலிருந்து தற்போதுவரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,300 முதல் 1,500 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு கொரோனா இரண்டாவது அலை, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது என பல காரணங்கள் உண்டு. தற்போது சென்னை மாநகராட்சியில் முன்பைப்போல் வீடு வீடாக சென்று காய்ச்சல், உடல் வெப்ப நிலை, உடலில் ஆக்ஸிஜன் அளவு குறித்து பரிசோதனை செய்ய 15 மண்டலங்களுக்கும் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு போலீஸ், மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடம் பெற்று இருப்பார்கள். ஏற்கனவே நமக்கு வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது குறித்த அனுபவம் உள்ளது. இதன்காரணமாக இந்த முறை கொரோனா பாதுகாப்பு வழிமுறை பின்பற்றுவது எளிமையாக இருக்கும்.
கடந்த ஆண்டு களப்பணியாளர் ஒருவருக்கு 140 -150 வீடுகள் கொடுக்கப்பட்டது. தற்போது ஒருவருக்கு 200 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் காய்ச்சல், வெப்ப பரிசோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.
காய்ச்சல் முகாம்கள் மீண்டும் அமைக்கப்படும் கடந்த ஆண்டு 1,15000 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் வீட்டு தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தற்போதுவரை போடப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எண்ணிக்கை இன்னும் 9 முதல் 10 லட்சம் பேர் உள்ளனர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும். கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியமாகும்.