“கூண்டுக்குள் வானம் “ அரங்கை திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டு சிறைவாசிகள் படிப்பதற்காக 150 புத்தகங்களை தானமாக வழங்கினார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வாசி திறனை வளர்க்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 46-வது சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 200 அரங்குகள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல புத்தக கண்காட்சியில் இரண்டு புதுமையான அரங்குகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ”குயீர் பதிப்பக அரங்கு” மற்றும் சிறைவாசிகளுக்கென புத்தக தானத்தை வலியுருத்தி சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பாக ”கூண்டுக்குள் வானம்” எனும் 286 வது புத்தக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்வோம், சமூக சீர்திருத்தத்தில் பங்கு கொள்வோம் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட “கூண்டுக்குள் வானம் “ அரங்கை திமுக வின் துணை பொதுச் செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பார்வையிட்டு சிறைவாசிகள் படிப்பதற்காக 150 புத்தகங்களை தானமாக வழங்கினார். மேலும் புத்தகக் காட்சி அரங்குகளையும் பார்வையிட்டு வாசகர்களுடன் உரையாடினார்.







