56- வது கட்டுமர படகு போட்டி: மீனவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு

பொங்கல் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருகே உள்ள மீனவ கிராமத்தில் இன்று 56- வது கட்டுமர படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான மீனவர்கள், இளைஞர்கள் கலந்து…

பொங்கல் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருகே உள்ள மீனவ கிராமத்தில் இன்று 56- வது கட்டுமர படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான மீனவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது,.இந்த பொங்கல் திருநாளை ஜாதி மதங்களை கடந்து வெகு சிறப்பாக கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. அதன் படி கோவில்கள், தேவாலயங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காணும் பொங்கல் நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்துறை மீனவ கிராமத்தில் பாரம்பரிய கட்டுமர படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதற்காக கடற்கரையில் கூடிய மீனவர்கள் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கேடையங்களும் வழங்கப்பட உள்ளன.

மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் தமிழர் வீரம் போற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவது போன்று மீனவ கிராமங்களில் இது போன்ற வீர விளையாட்டுகள் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மீனவ இளைஞர் ஒருவர் கூறும் பொழுது, தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை போன்று எங்கள் கிராமத்தில் நான்கு நாட்கள் வெகு சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 56 ஆண்டுகளாக பொங்கலை கொண்டாடி வரும் நிலையில், இந்த ஆண்டு மீனவர்கள் நலன் சார்ந்த விஷயங்களை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.