சென்னை தேனாம்பேட்டையில், மதுபோதையில், பெண் உள்பட நான்கு பேரை அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தேனாம்பேட்டை, தாமஸ் சாலையில் இரவு மின்தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் காற்றுக்காக சாலையில் நின்றிருந்துள்ளனர். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கு நின்றிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார்.
இதனை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால், அங்கிருந்தவர்களை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார். எனினும், அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் நடத்திய தாக்குதலில், ஒரு பெண் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கத்தியால் வெட்டிய நபர் சூனாம்பேட்டையைச் சேர்ந்த நீலமேகம் என்பதும், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி சிவக்குமாரின் கூட்டாளி என்பதும் தெரியவந்துள்ளது.







