முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?


வெ. காயத்திரி

கட்டுரையாளர்

நாட்டில் கொரோனா தடுப்பில் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் மூன்றாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா புதுப்புது அவதாரம் எடுப்பதே இதற்கு காரணமா?… இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

வைரஸ் என்பது டிஎன்ஏ, ஆர்என்ஏ என இரண்டு வகைப்படும். ஆர்என்ஏ வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ், மக்களிடையே தொடர்ந்து பரவும் நிலையில், ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, என தொடர்ந்து புது உருமாற்றம் பெற்றுக் கொண்டேதான் இருக்கும், என நச்சுகிருமிகள் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா 2-வது அலையில் உருமாற்றம் பெற்ற டெல்டா வைரஸின் பாதிப்பு ஓய்ந்து முடிவதற்குள், அது டெல்டா பிளஸ், என புதிய வடிவில் பரவத் தொடங்கி இருக்கிறது.

நம் நாட்டில் டெல்டா பிளஸ் வைரஸூக்கு எதிராக, தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் செயல்திறன் குறைவாக இருக்கலாம், என ஒருதரப்பு மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் புதிது புதிதாக உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்போது, அதற்கேற்றவாறு பொதுமக்கள் தடுப்பூசியில் பூஸ்டர் டோஸ், அதாவது 3-வது தவணை எடுத்துக் கொள்வது நல்லது, என்ற கருத்து மேலோங்கி வருகிறது. குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசியை 3-வது தவணையும் போட்டுக் கொண்டால், அது உருமாற்றம் பெறும் புதிய வைரசிடம் இருந்து, நீண்டநாள் பாதுகாப்பு அளிக்கும், என மத்திய அரசின் ICMR-ன் கீழ் செயல்படும் தேசிய நச்சுயிரியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வழியில், தற்போது பல்வேறு நாடுகளில், பொதுமக்கள் தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்திக் கொண்ட பின்னர், மேலும் 3-வது தவணை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அது கூடுதல் பாதுகாப்பு அளிப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசியை இரண்டு டோஸ் எடுத்துக் கொண்ட பின்னர், ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர், 3-வது தவணையை எடுத்துக் கொண்டால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவில், கொரோனா பீட்டா வேரியன்டுக்கு எதிராக, அஸ்ட்ராசெனிகா, பைசர் தடுப்பூசிகளை, பொதுமக்களுக்கு பூஸ்டர் 3-வது தவணை தடுப்பூசியாக போடப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில், இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு, புதிய உருமாறிய கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க, மூன்றாவது டோஸ் செலுத்துவது குறித்து, அந்நாட்டு அரசு ஆலோசனை செய்து வருகிறது. துபாயில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொண்டவர்களில், சிலருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்காவில் கொரோனா தடுப்பில், இரண்டு டோஸ்கள் முழுமையாக எடுத்துக் கொண்டவர்களின் தரவுகள் திரட்டப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தற்போதைக்கு பூஸ்டர் டோஸ் தேவையில்லை, என கண்டறிந்துள்ளதாக, அந்நாட்டின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் பைசர் மருந்து நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் போர்லா, பொதுமக்களுக்கு அநேகமாக மூன்றாவது டோஸ் தேவைப்படும் என்றும், மேலும் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு டோஸ் எடுத்துக்கொள்ளும் சூழல் உருவாகலாம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், 3-வது தவணை தடுப்பூசி அவசியமா என்பது குறித்த ஆய்வில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஈடுபட்டுள்ளது.

உலகில் கொரோனா பரவும் வேகத்திற்கும் மாறும் வடிவத்திற்கும், 3-வது தவணை தடுப்பூசி அவசியம் ஏற்படும் நிலை உருவாகலாம், என நோய்தொற்று பரவுதல் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். அதை உறுதிபடுத்தும் வகையில், 3-வது தவணை தடுப்பூசி, பொதுமக்களுக்கு நீண்டகால பலன்களை தரும், என புனேவில் செயல்படும் மத்திய அரசின் தேசிய நச்சுயிரியல் ஆய்வு மையமும் கருத்து தெரிவித்துள்ளது .

Advertisement:

Related posts

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு!

Gayathri Venkatesan

வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

எல்.ரேணுகாதேவி

பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !

எல்.ரேணுகாதேவி