செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் காட்சி முழுவதும் பெண்களுக்கு இலவசமாக ஒதுக்கி, கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. அந்த மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சியை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள், ‘லியோ’ படம் ஒரு தரமான சம்பவம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடே எதிர்பார்த்த ‘லியோ’ திரைப்படம் 9 மணிக்கு மாநிலம் முழுவதும் வெளியானது. ஆனால் சென்னையில் மிக முக்கிய திரையரங்காக கருதப்படும் ரோகிணி திரையரங்கில் மட்டும் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு 11.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அறிவிக்கப்பட்டது. எனினும் மற்ற திரையரங்குகளில் ரசிகர்கள் சிறிய தீபாவளி போல கொண்டாடினர்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் டிஜே, பேப்பர், பட்டாசுகள் என வெவ்வேறு விதமாக ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். மேலும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் சேலை, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. புதுக்கோட்டையில் ‘லியோ’ வெளியான திரையரங்கு ஒன்றில் ரசிகர் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் காட்சி முழுவதும் பெண்களுக்கு மட்டும் இலவசமாக ஒதுக்கி பெண்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளனர். முதல் நாள் முதல் காட்சிகளில் பெருநகர மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் பெண்களின் வரவு சொற்பமாகவே இருக்கும். எனவே இது ஒரு புதிய முயற்சியாக, அந்த மாவட்டம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.







