மான் ஒன்று ஆற்றை கடக்க முயன்ற போது அதனை முதலை துரத்தும் வீடியோவும், வேகமாக நீந்திச் சென்று மான் தப்பித்த காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரெட் லெச்வே என்பது தெற்கு மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த மான் இனம். இந்த வகை மான் ஒன்று ஆற்றில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்ல முற்படுகிறது. அப்போது அதனை பார்த்த முதலை மானை துரத்துகிறது. எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் மான் தனது வேகத்தை அதிகரிக்கிறது. முதலையும் தனது இரையை பிடித்துவிட வேண்டும் என்று துரத்துகிறது. மான் கரையை நெருங்கும்போது முதலையிடம் பிடிப்பட்டு பிறகு தப்பித்து தவ்வி தவ்வி கரையை கடக்கிறது.
சுமார் 50 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை ட்விட்டரில் தேசிய விருது வென்ற திரைப்பட இயக்குநரான வினோத் காப்ரி பதிவிட்டுள்ளார். ‘டாப் கிளைமேக்ஸ்’ என்று பதிவிட்டு இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 45 ஆயிரம் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.







