உதகை படகு இல்லத்தில் ஆபத்தை உணராமல் படகின் மீது நின்றபடி செல்ஃபி எடுத்து படகு சவாரியில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் மீது அபராதம் விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது ஊட்டி என அழைக்கப்படும் உதகமண்டலம். ஊட்டியின் அழகை ரசிப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 லட்சதிற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகை புரிகின்றனர்.
அவ்வாறு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் உதகை படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்வது வழக்கம். அதேபோல் உதகை படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் துடுப்பு படகு, மிதவை படகு, இயந்திர படகு உள்ளிட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகளில் சுற்றுலா பயணிகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்வது வழக்கம்.
அதே போல் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கவச உடைகள் வழங்கி படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர மிதவை மற்றும் துடுப்பு படகுகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் படகுகளில் நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் படகில் நின்றபடி செல்ஃபி, எடுக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல் இன்று உதகை படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் மிதவை படகில் சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் பாதுகாப்பு கவச உடைகள் இன்றி மிதவை படகில் நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதங்கள் விதித்தால் மட்டுமே இதுமாதிரியான செயல்களை தவிர்க்க முடியும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா











