காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கா் ஃபொ்னாண்டஸ் ஆகியோரால் கடந்த 2010-ஆம் ஆண்டு யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது. தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரா்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோா் உள்ளனா்.
இந்த நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, டெல்லி, மத்திய பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பாஜகவின் அரசியல் பழிவாங்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.








