எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் – அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 29.9.2025 வரை தொடர் பிரச்சாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 20.9.2025, 21.9.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 4.10.2025, 5.10.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.