சந்திரமுகி படத்தின் கடைசி நாள் படப் பிடிப்பை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முடித்து விட்டதாக அவருக்கு கேக் வெட்டி பிரியா விடை கொடுத்துள்ளது சந்திரமுகி படக்குழு.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 17 வருடங்களுக்குப் பின் ’சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, டி.எம்.கார்த்திக் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற எம்எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில், அந்த கதாப்பாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரணாவத் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடுந்துள்ளதாக சந்திரமுகி படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் “வீ மிஸ் யூ கங்கனா ரணாவத்” என்ற கேக்கை இயக்குனர் பி.வாசு வெட்டி அவருக்கு பிரியா விடை கொடுத்துள்ளனர்.
இது குறித்து கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
” சந்திரமுகி படத்தில் எனது பாத்திரத்தை இன்று நிறைவு செய்கிறேன். நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் விடைபெறுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இத்தனை நாட்களில் இதுவரை நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டருன் புகைப்படமே எடுக்கவே இல்லை.
ஏனெனில், பெரும்பாலும் நடிகர்கள் அனைவரும் படத்தின் காஸ்ட்யூமிலேதான் இருப்போம். அதனால், இன்று படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவர் இன்று வெற்றிகரமான இயக்குநராக, நடனக்கலைஞராக, நடிகராக, நல்ல மனிதராக வலம் வருகிறார். அவருடன் பணிபுரிந்தது எனக்குப் பெருமை. உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.
– யாழன்








