நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டி கடந்த 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்தது. இந்நிலையில் இரண்டாவது டி-20 போட்டி ராஞ்சியில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு பதிலாக ஹர்ஷல் படேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியின்போது முகமது சிராஜ் கையில் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சர்வதேச டி-20 போட்டியில் அறிமுகமாகிறார்.
நியூசிலாந்து அணியில் பெர்குசானுக்குப் பதிலாக, ஆதம் மில்னே அணியில் இணைந்துள்ளார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியது. 15 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்ஹ மார்டின் குப்தில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மிட்செல்லும் மார்க் சாப்மனும் ஆடிவருகின்றனர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், நியூசிலாந்து வீரர்கள் அடித்து ஆடி வருகின்றனர். 8 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.







