சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று முன்தினம் (22-02-2026) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (23-02-2026) காலை 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
25-02-2026 முதல் 27-02-2026 வரை: தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







