கொடநாடு கொலை வழக்கை விசாரித்த அதிகாரி திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்ட விவகாரம் மேற்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இப்போதே கை, கால், மூக்கு வைத்து பேசத் தொடங்கி விட்டதால் இதற்கு வலுவான காரணம் இல்லாமல் இருக்குமா ? என காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான வழக்கு உதகை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வழக்கின் வேகம் மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவிடம் அவரது சென்னை இல்லத்தில் வைத்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை பொறுத்தவரை, சம்பந்தபட்ட அனைவரும் மேற்கு மண்டலத்திற்கு நேரில் வருமாறு சம்மன் அனுப்பிய விசாரிக்கப்பட்டது. ஆனால் சசிகலாவிடம் மட்டுமே அவரது சென்னை இல்லத்திற்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது சசிகலா தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அதிகாரிகள் உணவு இடைவேளையை முடித்து விட்டு அன்றைய தினம் விசாரணை தொடங்கலாம் என கருதியபோது, சசிகலாவோ, நான் ஜூஸ் குடித்துவிட்டேன். உணவு இடைவெளி தேவையில்லை. தொடர்ந்து கேள்வி கேளுங்கள். எனக்கு உண்மையான குற்றவாளிகளை கைது செய்தால் போதும் என்றாராம். அதேபோல், விசாரணை முடிவடைந்து அதிகாரிகள் கிளம்ப தயாரானபோது, இன்னும் 10 நிமிடங்கள் நான் காத்திருக்கிறேன். வேறு கேள்விகள் எதுவும் மிஸ்ஸாகிவிட்டதா என யோசித்து கூறுங்கள் என கூறியுள்ளார்.
இப்படி விசாரணையின்போது நடைபெற்ற தகவல்கள் பலவும் வெளி உலகிற்கு உடனுக்குடன் தெரிய வந்தது. இது உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முக்கிய கொலை வழக்கில் இவ்வளவு கேர்லஸாக இருக்கலமா ? என அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், இவ்வழக்கில் விசாரணை அதிகாரிகளாக உள்ளவர்களின் பின்புலங்கள் குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் போட்டுள்ளது. அதில் இன்னமும் சிலர், கடந்த ஆட்சியில் கோலோச்சிய முக்கிய அமைச்சர்கள் சிலருடன் நெருக்கமான உறவுடன் உள்ளனர் என்ற தகவல் இடம் பெற்றதாக தெரிகிறது.
இந்நிலையில், கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து வந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தேனி மாவட்டத்திற்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக குன்னூர் டிஎஸ்பியாக இருந்த சந்திர சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டிரான்ஸ்பர் வழக்கமான ஒன்றுதான் எனக்கூறினாலும், அங்கு நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் எகிற வைக்கிறது.
இராமானுஜம்.கி