திமுக – காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் காட்டியது அதிமுக அரசு தான் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கைத்தறி, துணிநூல், கதர்த்துறை, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ., சேகர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை “ஜல்லிக்கட்டு நாயகன்” என்று புகழ்ந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாகவும், அவர் எத்தனை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளை அடக்கினார்? என்றும் கேள்வி எழுப்பினார்.
உடனே எழுந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தாம் இளவயது காளையாக இருந்த போது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியதாகவும், திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் இருந்த போது, “காளை”-ஐ விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், பின்னர் அதிமுக ஆட்சியிலேயே சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று அவசர சட்டம் நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, அது சட்டமான பின்னர் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் “ஜல் ஜல்” என்று நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, ஜல்லிக்கட்டு போட்டியை திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசு தடை செய்யவில்லை என்றும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றம் சென்றதால், நீதிமன்றம் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்ததாகவும், மீண்டும் போட்டிகள் நடைபெற அதிமுக அரசு காரணமல்ல என்றும், மக்கள் போராட்டத்தால் மீண்டும் போட்டிகள் சாத்தியமானதாகவும் தெரிவித்தார்.








