கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் போலி பிஸியோதெரபி டாக்டராக பணியாற்றி உள்ளார்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கடந்த 22ம் தேதி தன் வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர், லட்சுமி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த லட்சுமி செயினை காப்பாற்ற போராடியபோது அந்த மர்ம நபர் லட்சுமியை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மூலம் கொள்ளையர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையடித்து சென்ற நபர் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த நடேசன் குமார் என்பது தெரிய வந்தது.
நடேசன் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட இவரின் தந்தை நம்பிராஜன் டாக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும், நடேசன் குமாரும் தான் பிஸியோதெரபிஸ்ட் படித்து முடித்துள்ளதாக கூறி அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை செய்துவந்துள்ளார். மேலும், நடேசன் குமார் பிஸியோதெரபிஸ்ட் பட்டம் பெறாமல் போலியாக சிகிச்சை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிஸியோதெரபிஸ்ட் டேனியல் என்பவர் போலீசில் புகார் கொடுத்திருந்ததும் தெரிய வந்தது.
நடேசன் குமாரின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் பிஸியோதெரபிஸ்ட் சான்றிதழ் பெறாமலேயே சிகிச்சை செய்து வந்தததும், கொரோனா தொற்றின்போது வேலை இல்லாமல் இருந்ததால் செயின் பறிப்பு சம்பவத்தில் நடேசன் குமார் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இடையடுத்து செயின் பிரித்த நடேசன் குமாரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.







