ஓ.பன்னீர்செல்வம் வகித்த அனைத்து துறைகளிலுமே வசூல் ராஜாவாக திகழ்ந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் விநாயகர் கோவில் ஒன்றில் அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நான் உட்பட 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவது கடைந்தெடுத்த பொய். ஒருவேளை அப்படி சொல்லி இருந்தால் நான் தான் முதல் ஆளாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்” என்று கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள் எனவும் வீட்டுவசதி, கருவூலம், நிதி என அனைத்து துறைகளுமே கேட்டு வாங்கிக் கொண்டவர் தான் ஓபிஎஸ் எனவும் விமர்சித்த ஜெயக்குமார், “உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் போல வசூல்ராஜா ஓபிஎஸ்” என சாடினார்.
அதிமுக அலுவலகம் தன் வீடு போல எனக் கூறும் ஓபிஎஸ் பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் அங்கு சென்றது ஏன் என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்தவர் ஓபிஎஸ் எனவும் பேசினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருப்பதாகவும் காவல்துறை கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார். ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, முழுமையான அறிக்கை வெளிவந்த பிறகு தன்னுடைய கருத்துக்களை பகிர்வதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்




