நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்திருப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி நியமித்தது. நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்த ஆய்வு செய்யும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக இந்த குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆய்வுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது எனவும் இதுகுறித்து மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு நிதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்துள்ளது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்றும் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமிக்க முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்தது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும் பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளது.







