தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள 5 தடகள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் 5 தடகள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊக்கத்தொகையை, அவர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் மெய்யநாதன், வரலாற்றிலேயே முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 11 பேர் தகுதி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார். அதிலும் 5 வீராங்கனைகள் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 11 பேரும் தங்கம் பெற்று திரும்புவார்கள் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் விளையாட்டு நகரம் விரைவில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.







