பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டவர்கள், இரு சக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டக் கூடாது என்பது தான் காங்கிரசின் நிலைபாடு என்றார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகியோர் மாட்டு வண்டியில் ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் : தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் டீசல் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது என்றார். இதனைத் தொடர்ந்து ஆளுநரை நேரில் சந்தித்து பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை குறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றார். தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றுள்ளது, இதனை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பி வைக்க உள்ளோம் என்றார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.







