என்எல்சி பங்குகளை விற்க முயலும் மத்திய அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

என்எல்சி நிர்வாகத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

என்எல்சி நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசு, என்எல்சி நிர்வாகத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் NLC நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும். நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நடப்பாண்டில் 3,769 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது. இப்படி லாபகரமாக இயங்கி வரும் NLC நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2006-ஆம் ஆண்டு NLC நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்தபோது, கழக அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், நலச் சங்கங்கள், அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டன.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் “NLC பங்குகளை விற்பனை செய்ய, காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு முயன்றால், நானே களத்திற்கு வந்து எனது தலைமையில் பங்கு விற்பனைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவேன்” என்று எச்சரித்ததன் விளைவாக, அந்தப் பங்கு விற்பனையை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முழுமையாகக் கைவிட்டது.

தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு SEBI விதிமுறைகளைக் காரணம் காட்டி அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த போது, புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான தமிழக அரசு, கடும் நிதி நெருக்கடிக்கு இடையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 3.56% NLC பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் வாங்கி, NLC நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இந்நிலையில் மீண்டும் தற்போது மத்திய அரசு NLC நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.