எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுவதாக எம்.பி திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அரியலூரில் உள்ள தனது சகோதரியின் நினைவிடத்திற்குச் சென்ற போது, செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், பாஜக அரசு மாநில அரசுகளை நசுக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வைaக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவித முனைப்பையும் அவர்கள் காட்டவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கூறியிருப்பது கூட கார்ப்பரேட் அனுசரணை இருப்பதாகத் தெரிகிறது எனக் கூறிய அவர், தேசியக் கொடியை பாலிஸ்டர் துணியில் தைப்பதற்கான ஒப்பந்தம் அவர்களுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கையைச் சேர்ந்தவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் கையேந்துகிறார்கள் என அண்டை நாடுகளை இழிவுபடுத்திப் பேசுவது என்பது அரசியல் உறவில் பாதிப்பு ஏற்படுத்தும் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்த அவர், தனியார்ப் பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் ஏற்படுகிறது. ஸ்ரீமதியின் மரணத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘ஸ்ரீரங்கமும் பெரியாரும்; வரலாற்றுப் பின்னணி!’

தொடர்ந்து பேசிய அவர், ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைத்து அப்புறப்படுத்தவும் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார்கள். இது மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டும் செயல், பேசுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறினார். மேலும், 5ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் அரசுக்குப் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் தெரியவருகிறது எனக் கூறினார். இதனை சிபிஐ விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கும் அளவிற்கு விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது எனத் தெரிவித்த அவர், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மத்திய அரசு செயல்படுவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.







