நமக்கு கிடைத்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்- ஆளுநர்

நமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாம் கொண்டாடுவதோடு அதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்று வேல்ஸ் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை பல்லாவரம் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி…

நமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாம் கொண்டாடுவதோடு அதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்று வேல்ஸ் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

சென்னை பல்லாவரம் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வேல்ஸ் நிறுவனர் கணேஷ், இயக்குனர் சங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ராடிசன் ப்ளூ குழுமத் தலைவர் விக்ரம் அகர்வால், பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் அஜித் குமார் மோஹிந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா மற்றும் இயக்குனர் சங்கர் இருவருக்கும் கௌரவ டாக்டர் விரிவுரையாளர் பட்டம் ஆளுநர் கையினால் வழங்கப்பட்டது. மேலும் இந்த கல்வியாண்டில் 4829 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சிலருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம். இன்றைக்கு உங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான சாதனை. உங்களுக்கு என்று ஒரு வேலை மற்றும் குடும்பம் என்று இனி முன்னோக்கி செல்வீர்கள். அண்மை காலத்தில் இந்தியாவில் என்ன பண்ண முடியும்? இந்தியா என்றால் யார்? என்று உலக அரங்கில் காண்பித்து உள்ளது. மிகப்பெரிய கொரோனா தொற்று காலத்தில் கூட இந்தியா பிற நாடுகளுக்கு உதவி உள்ளது.

தற்பொழுது இருக்கும் காலநிலை சூழல், உலக வெப்பமயமாதல், மழை குறைப்பு, பனிமலை உருகுதல் என்று பல பிரச்சனையை உலகம் சந்தித்து வருகிறது. ஆனால் காலநிலை மாற்றத்திற்கு இந்தியா முன்னெடுக்கும் விஷயங்களுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தருகின்றனர். இந்த சுற்றுச்சூழல் காக்க உங்களால் முடிந்தவரை செய்யுங்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தொழில் முனைவராக மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள். யாருக்கும் பயப்படாதீர்கள். நிறைய பயணம் செய்யுங்கள். வாழ்க்கை என்பது தொடர் வெற்றி இல்லை. நான் பல இடங்களில் தோல்வி அடைந்து உள்ளேன். உங்களின் வெற்றி நாட்டின் வெற்றி ஆகும். நாம் நம்முடைய 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். ஆனால் 1950ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர்களை கேட்டால் சுதந்திரத்தின் முக்கியத்துவம் தெரியும்.

நமக்கு கிடைத்த இந்த சுதந்திரம் கொண்டாட பட வேண்டியது. நாம் தான் அதை பாதுகாக்க வேண்டும். வருடந்தோறும் தேசிய கொடியை மட்டும் நெஞ்சில் குத்திக்கொண்டால் போதாது. இந்த சுதந்திரத்திற்காக தமிழகத்தில் 1000 பேர் உயிர் இழந்தனர். சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் பல இளையர்கள் அவர்களின் வாழ்வை இழந்தனர் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.