முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

ஸ்ரீரங்கமும் பெரியாரும்; வரலாற்றுப் பின்னணி!


ஜோ.மகேஸ்வரன்

கட்டுரையாளர்

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை குறித்து திரைப்பட நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமன கனல் கண்ணனின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்திலிருந்து சற்று தூரத்தில், காவல் நிலையம் அருகே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பிலும் போலீஸ் பாதுகாப்பிலும் இந்த சிலை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி, வழங்கப்பட்ட இடத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட வரலாறு குறித்து விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருச்சி மாநகராட்சியின் ஒரு கோட்டமாக உள்ள ஸ்ரீரங்கம் தனி நகராட்சியாக இருந்தது. அப்போது (1970-ஆம் ஆண்டு) நகராட்சி தலைவராகச் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த Y.வேங்கடேச தீட்சிதர் இருந்தார். அவரது தலைமையில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 1973-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 1975-ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திடம் இடம் ஒப்படைக்கப்பட்டவுடன், அந்த இடத்தில் முதலில் நினைவு கல்வெட்டு வைக்கப்பட்டது. அதன் பின்னர் பெரியார் சிலை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி பெரியார் சிலை திறப்பு விழா என்று அறிவிக்கப்பட்டது. கைத்தடியைப் பிடித்தபடி நின்ற நிலையில் பெரியார் சிலை சிமெண்டால் அமைக்கப்பட்டது. திறப்பு விழா பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த போது, யாரும் எதிர்பாராத வகையில், பீடத்தில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலைப் பாகம் 2006 டிசம்பர் 7-ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதையடுத்து தொடர் போராட்டம், பதற்றம் ஏற்பட்டது.

அந்த சம்பவத்தால், அறிவித்தபடி, டிசம்பர் 17-ஆம் தேதி சிலை திறக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், அடுத்த திருப்பமாக அன்று இரவே சிலை அமைப்புக் குழுவால் பெரியாரின் வெண்கலச் சிலை வைக்கப்பட்டது. வேறு இடத்தில் வைக்கத் திட்டமிட்டிருந்த இந்த சிலைதான் ஸ்ரீரங்கத்தில் தற்போதுள்ள என்பது வரலாறு. அப்போது, சிலையை உடைத்த வழக்கில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை அமைப்புக் குழு செயலாளராக இருந்த சீனி விடுதலையரசு நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டியளிக்கையில், “ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை திடீரென அமைக்கப்படவில்லை. நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, இடம் ஒதுக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் சிலை அமைக்க உதவியுள்ளனர். சிலை திறப்பு விழாவில் ஸ்ரீரங்கம் நகராட்சி தலைவராக இருந்த Y.வேங்கடேச தீட்சிதர் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும் ஸ்ரீரங்கம் சித்திரை வீதியில் பெரியார் பங்கேற்ற பொதுக்கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. அப்போதும் யாரும் எதிர்ப்பு காட்டியதில்லை.

சிலை அமைத்து 16 ஆண்டுகள் ஆகிறது. தற்போது வரை வழிபடச் செல்லும் பக்தர்களுக்கோ, சாமி புறப்பாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போதோ எந்தவித சங்கடமான சம்பவமும் நடக்கவில்லை. ஸ்ரீரங்கத்து மக்கள், பக்தர்கள் இணக்கமாகவும், நட்புணர்வுடன் உள்ளனர். ஆனால், அர்ஜுன் சம்பத், கனல் கண்ணன் போன்ற வெளிநபர்கள், திட்டமிட்டே சர்ச்சையை உருவாக்கி, சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அரசு தடுத்து நிறுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – என்ன ஸ்பெஷல் தெரியுமா?’

கடந்த 2006-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த கிரிஜா மோகன் நியூஸ் 7 தமிழிடம் கூறுகையில், “ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை இருப்பதால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனைவரும் கோயிலுக்குள் செல்லலாம், குறிப்பாக என்னைப் போன்ற பெண்கள் அறங்காவலர் குழுவில் இடம் பெறவும் பெரியாரே காரணம். எனவே, அவர் சிலை அங்கு இருப்பதே சரி” எனத் தெரிவிக்கின்றார்.

திருச்சிக்கும் பெரியாருக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. 1951-ஆம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளுக்கு மேல் பெரியார் திருச்சியில் தங்கி இயக்கப் பணிகளைச் செய்துள்ளார். தந்தை பெரியார் இறுதிப் பேரூரை  நிகழ்த்திய  வாகனம் திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகையில் இப்போதும் உள்ளது. கடந்த 1967ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி திருச்சியில் பெரியார் சிலை திறக்கப்பட்டது. அவர் வாழ்ந்த போது திறக்கப்பட்ட முதல் சிலையும் இதுதான்.

தமிழ்நாடு முழுவதும் பெரியார் பெரிதும் அறியப்பட்டாலும், திருச்சி மக்களுடன் பெரியார் நெருங்கிய தொடர்பிலிருந்ததால், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் எதிரே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டவில்லை மாறாக ஆதரவு கொடுத்ததாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

– ஜோ. மகேஸ்வரன்

மேலும் படிக்க – கனலை கக்கிவிட்டாரா கனல் கண்ணன்?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உ.பியில் கொரோனா கப்பா வேரியன்ட் வைரஸ் பாதிப்பு

Halley Karthik

சிறப்பு விடுப்பில் வெளியேவந்த பேரறிவாளன்!

கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D