கொரோனா பாதிப்பு காரணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுதுவம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வரும் 22ஆம் தேதி முதல், குறிப்பிட்ட ஒன்பது தொழில்களை தவிர, மற்ற தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் வழங்குவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







