நெல் கொள்முதல் ஈரப்பதத்தை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் நெற்கதிர் பாதிப்புகளை ஆய்வு செய்த தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்தில் சாய்ந்த நெற்பயிர் பாதிப்புகளை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட சம்பா சாகுபடியில், 20 ஆயிரம் ஏக்கர் அறுவடை முடிந்த நிலையில் கடந்த 3 நாட்கள் பெய்த கன மழை பாதிப்பு காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மழையால் நனைந்த நெற்கதிர்களை கையில் பிடித்தபடி பாதிப்பின் விவரங்கள் குறித்து, நாகை மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். நெற்பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது..
”தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு குழுவிடம் நெற்கதிர்களை அனுப்பி ஈரப்பதத்தை குறைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடீர் மழை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நீரில் நனைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்கள் ஆவதால், இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெற்பயிர் மட்டுமில்லாமல் உளுந்து உள்ளிட்ட ஊடு பயிர் பாதிப்புகளையும் கணக்கிட்டு
தண்ணீர் வடியும் தன்மையை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும்.” என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பேரிடர் காலங்களில் தொடர்ந்து தமிழக அரசுக்கு நிதி கொடுக்காமல் ஒன்றிய அரசு மறுப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் “மக்கள்
புரிந்துகொள்வார்கள்” என்றார். அதனை தொடர்ந்து கீழ்வேளூர் அடுத்துள்ள சாட்டியகுடி , தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
– யாழன்