தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில் குளங்களை சுத்தப்படுத்தி, பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோயில் குளங்களை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோயில், குளங்கள் சம்மந்தமான நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.







