ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றால் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்திற்கு தடை கோரி வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றால் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்திற்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த ஜான்மார்டின் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “1989ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடர்பாக கடந்த ஜூன் 7 ஆம் தேதி திருத்தம் கொணரப்பட்டுள்ளது. அந்த திருத்தம் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விதியின்படி, அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில், ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்கள், உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அலுவலர் முன்பாக வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை.
இந்த புதிய திருத்த விதிமுறைப்படி, அரசின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகள், 2 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்க வேண்டும். பயிற்சி எடுப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பது கட்டாயம். இதனால் இந்தியா முழுவதும் உள்ள 4,187 ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துவோர் பாதிக்கப்படுவர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள 1,650 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை நடத்துவோர், மற்றும் அங்கு பணி புரியும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
நகர பகுதிகளில் 2 ஏக்கர் நிலம் என்பது வாய்ப்பில்லாத ஒன்று. நகரத்தில் இருந்து, 25 கிலோ மீட்டர் தொலைவில் தான் இது போல பயிற்சி பள்ளியை அமைக்க முடியும். எனவே, ஓட்டுநர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் தொடர்பான, மத்திய மோட்டார் வாகன விதி முறை திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.







