ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டத்தை சிபிஎஸ்இ தாக்கல் செய்தது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இதுகுறித்து விளக்கம் அளித்தார். 12-ஆம் வகுப்பு பாடங்களில் 40 சதவீத வெயிடேஜ் மதிப்பெண்களும், 11-ஆம் வகுப்பு பாடங்களில் 30 சதவீத வெயிடேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும் என குறிப்பிட்ட அவர், செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.







