“காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு விவகாரம்: ராகுகாந்தியிடம், முதலமைச்சர், விஜய் பேச வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக ராகுகாந்தியிடம், முதலமைச்சர், விஜய் பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு அணைநீர் போன்ற பத்துக்கு மேற்பட்ட நீர் பிரச்சனைகளுக்கு, கர்நாடகா, கேரளா மாநிலங்களுடன் பல ஆண்டுகளாக, பேச்சு வார்த்தை நடத்தியும், நிரந்தர தீர்வு காணப்படாமல் தமிழகம் பரிதவித்து நிற்கும் அவல நிலையில் உள்ளது.

இந்நிலையில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தவெக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தான் ஆட்சியிலிருக்கின்றன. மேலும், தவெக அரசில் காங்கிரஸ் அமைச்சர்களும் இருக்கிறார்கள். ஆகவே, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா முதல்வர்களின் ஒத்துழைப்போடு, இந்த அணைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகாண வேண்டும்.

இது ஒரு புறமிருக்க, மறுபுறம் மேகேதாட் அணையை கட்டுவதற்கு பாரதப் பிரதமர் மோடி, மறைமுக அனுமதி வழங்கியிருப்பதைப் போல, ஜோசப் விஜய் அவர்களின் தோழமைகட்சி தலைவரான வைகோ போன்றவர்கள் உண்மைக்கு மாறாக, நெறி தவறிப் பொதுவெளியில் கொண்டிருக்கிறார்கள், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் ஜோசப் விஜய், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைபோல் இல்லாமல், தமிழக மக்களின் நலனையும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தையும் மனதில் வைத்து தனது தோழமைக் கட்சி தலைவரான ராகுல்காந்தியிடம் பேசி, காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு அணைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.