செப்.8-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

வருகின்ற செப்டம்பர் 8-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் நடைபெற உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகள் அவ்வப்போது கூடி ஆலோசித்து வருகின்றன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடக அரசு காவிரி நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறித்து இரு மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி, வழக்கை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (8-ஆம் தேதி) டெல்லியில் நடைபெற உள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முந்தைய உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளதா, தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் அளவு, கர்நாடக அணைகளில் இருக்கும் நீரின் அளவு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு உள்ளிட்ட விஷயங்கள் தரவுகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட உள்ளன.

அதேவேளையில், தமிழகம் தரப்பில் கூடுதல் நீர் திறந்துவிடக் கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.