காவேரி விவகாரம் : மக்களுக்காக அவமானத்தை தாங்கவும் தயார் – உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில்!

காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார். இதனையடுத்து காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் எனவும் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

அப்போது பேசியவர், “காவிரி விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். மேகதாது விவாகரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றை குறிப்பிட்டு தான் பிரதமருக்கு நேர்முக கடிதம் எழுதினேன். கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோது 1969-ல் இதே பேரவையில் விவாதங்கள் நடந்தன. காவிரி பிரச்னையை தீர்க்க ஒரு முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே என நான் நினைத்தேன்.

அங்கு உங்களுக்கு அவமானம் நடைபெற்றால் என்ன செய்வது என்று சிலர் கூறினார்கள், தமிழ்நாட்டு மக்களுக்காக அதனையும் தாங்கிக் கொள்ள தயாராக இருந்தேன். காவிரி விவகாரத்தை தமிழ்நாடு சட்டரீதியாக அணுகுவதில் உறுதியுடன் இருக்கிறோம். காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது. காவிரி விவகாரம் பற்றி நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்குது என்பது தெரிந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.