இந்தியாவை 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை அடைய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அண்மைக்காலமாக அடைந்துள்ள முன்னேற்றங்கள் இதற்கு அடிப்படையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தெளிவான இலக்கு நிர்ணயிக்கப்படும்போது ஆட்சியின் வேகமும் அணுகுமுறையும் மாறும் என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தனிநபர்கள், நிறுவனங்கள் மட்டுமின்றி ஒரு நாட்டுக்கும் காலக்கெடு என்பது முக்கியம். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க 2047-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நாங்களும் செயல்பட்டு வருகிறோம்.
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தக் கனவு இருந்து வருகிறது. ஆனால், தற்போது அதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பாக நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். காலக்கெடு நிர்ணயிக்கப்படும்போது, நாம் செயல்படும் விதமும் வேகமும் மாறுகின்றன” என்றார்.
மேலும், 2047-ஆம் ஆண்டுக்கான காலக்கெடு என்பது பணிகளை விரைவுபடுத்தவும், முன்னேற்றத்தைத் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செயல்படவும் ஊக்கமளிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார்.
தகவல் தொடர்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் சாதனைகளையும் திறமைகளையும் சர்வதேச அளவில் நாம் சரியாக எடுத்துரைக்கிறோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “21-ஆம் நூற்றாண்டில் தகவல் தொடர்பு என்பது முக்கியமான அம்சமாகும். இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக் கதையை உலகிற்குச் சொல்ல நம்மிடம் நிறைய உள்ளது. ஆனால், இந்தத் திறனை நாம் பயன்படுத்துகிறோமா? இந்தியாவின் வளர்ச்சிக் கதையை உலக நாடுகளிடம் எடுத்துச் செல்கிறோமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ மூலம் தனிநபர்களின் சாதனைகளை எடுத்துரைக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஊடகங்களும் இதுபோன்ற சாதனைகளை எடுத்துரைத்தால், அது நாட்டுக்குப் பயனுள்ளதாக அமையும்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.




