“பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார். இதனையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது, “மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாய பிரதிநிதிகளிடமும் ஆலோசனை செய்யவேண்டும். கர்நாடகாவிடம் ஒவ்வொரு வருடமும் போராடி தான் தண்ணீர் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டும் தண்ணீர் திறக்கவில்லை. போதுமான தண்ணீர் இல்லாமல் இருந்ததால் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் காய்ந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.