செங்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியரை ஊராட்சி பகுதியிலுள்ள 12-வது வார்டில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை எனவும், 15 நாட்களுக்கு முன்பு டேங்கர் லாரி மூலம் விநியோகிக்கப்பட்ட தண்ணீரில் புழுக்கள் படிந்து மாசடைந்து காணப்பட்டதாகவும், அதனை குடித்த குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடங்களுடன் சாலை முற்றுகையில் ஈடுபட்டனர்.
இப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழும் பகுதியை புறக்கணித்து, மற்ற வார்டுகளுக்கு சிறுமுலாபேரி அணையின் குடிநீரை விநியோகம் செய்தார் எனவும், தேர்தலின் போது அப்பகுதி மக்கள் வாக்களிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வருகை தந்தபோது அவரிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர் ஊராட்சி மன்ற தலைவர் தன்னுடைய பேச்சை கேட்பதில்லை என கூறியதால் அவர் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-அனகா காளமேகன்






