மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகராகவும், மிமிக்ரி கலைஞராகவும் வலம் வந்தவர் கொல்லம் சுதி. இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது கேரள தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையால் கேரள மக்களின் மனங்களை மகிழ்வித்தவர். 39 வயதாகும் இவர் இன்று அதிகாலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, தனது சக கலைஞர்களான உல்லாஸ் அரூர், பினு, மகேஷ் ஆகியோருடன் காரில் வீடு திரும்பி உள்ளார். வட்டக்கரா பகுதியில் இருந்து வீடு திரும்பிய கொல்லம் சுதியின் கார் திருச்சூர் பகுதியில் உள்ள கைப்பமங்கலம் பகுதியில் செல்லும் போது இன்று காலை 4. 30 மணி அளவில்அவரது கார் விபத்துக்குள்ளானது.
எதிரே சரக்குகளை ஏற்றி வந்த கனரக வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர், கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற மூவர்கள் கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்லம் சுதி மறைவு கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவிற்கு கேரள திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், சுதி மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜ்மல் இயக்கி வெளிவந்த “காந்தாரி” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கொல்லம் சுதி, தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான “கட்டப்பனையிலே ரித்திக் ரோஷன்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து குட்டநாடன் மர்ப்பப்பா, கேசு ஈ வீட்டை நாடன், எஸ்கேப், ஸ்வர்கத்திலே காட்டுறும்பு கொல்லம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது கேரளாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா








