ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சம்பவ இடத்தில் இருந்து நியூஸ் 7 தமிழ் துணை ஆசிரியர் அன்சர் அலி அளித்த கூடுதல் தகவல்களை தற்போது பார்க்கலாம்…
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகளுடன் அந்த பகுதியிலேயே தங்கியிருந்து சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், நேற்றிரவு இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நியூஸ் 7 தமிழ் துணை ஆசிரியர் அன்சர் அலி தலைமையிலான குழு சென்று கள நிலவரங்களை வழங்கி வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து நியூஸ் 7 தமிழ் துணை ஆசிரியர் அன்சர் அலி தெரிவித்ததாவது:
தற்போது இரண்டு தடங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த தடங்களில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள இரு தடங்களும் தீவிரமாக சீர்செய்யப்பட்டு வருகின்றன. இந்த இரு தடங்களும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் இந்த 4 தடங்களிலும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. தற்போது சிதறிக்கிடக்கும் ரயில் பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் நிலைமை சீறாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு செய்தியை காணொளியாக காண:








