அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. எனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஜோசப் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையத்திடமிருந்து இது தொடர்பாக எந்த பதிலும் அவருக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர், அதிமுகவில் உட்கட்சி மோதல் நடைபெறுவதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28 ஆம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்றும், தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்ததது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் 25 ஆயிரம் அல்ல, மேலும் 25 ஆயிரம் கூடுதல் அபராதம் விதித்திருக்க வேண்டும். இந்த மனுவை ஏற்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.







