திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர்.
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் தனுஷ் நடிப்பில் உருவாகிய உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள தனுஷ் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடினர்.
சென்னையில் சிறப்பு காட்சிகள் காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் இணைந்து ரசிகர்களுடன் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து ரசித்தனர். நடிகர் தனுஷின் வருகையால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்க்க ஏராளமான திரை பிரபலங்கள் ரோகிணி திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு அனிருத்-தனுஷ் கூட்டணியில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.







