குலசேகரபட்டிணத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு தேவையான நிலத்தினை கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ராக்கெட் ஏவுதளம் அமையும் எனத் தெரிகிறது.
இந்திய விண்வெளி துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை செய்து வருகிறது. விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது. 36 நாடுகளுக்கு சொந்தமான 340 செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் செலுத்தி உள்ளது. அடுத்தாண்டு இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் முயற்சி எடுத்து வருகிறார். இதுதொடர்பாக எழுத்து மூலமாக மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் பணி முழுவதுமாக முடிவடைந்த பின்னர் ராக்கெட் ஏவுதளம் அமையும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு இரண்டாயிரத்து 350 ஏக்கர் நிலம் கையகப்படுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவை விரைவில் முறைப்படி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். அதனைத்தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் எனத்தெரிகிறது.
இங்கு கட்டுமான பணிகளுக்கு ஒரு ஆண்டு தேவைப்படும். அதன்பிறகு ராக்கெட் ஏவுவதற்கான பணிகள் நடைபெறும். முதலில் ஒரு ஏவுதளம் அமைக்கப்படும். அதன்பிறகு தேவையை பொறுத்து இன்னொரு ஏவுதளம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பணிகள் வரும் 2026 ஆண்டுக்குள் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இராமானுஜம்.கி