கந்த சஷ்டி விழாவில் முதலமைச்சருக்கு அரோகரா : உயர்நீதிமன்றத்தில் வழக்கு – விரைவில் விசாரணை!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் போது முதலமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிறத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, மிகவும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாகும். இந்த விழாவில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து, மத நம்பிக்கையுடன் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக, சூரசம்ஹாரம் நிகழ்வு, சூரபத்மன் மீது முருகப் பெருமான் பெற்ற வெற்றியைக் குறிக்கும் புனிதமான மத நிகழ்வாகும். இது மத பக்தி, வழிபாடு மற்றும் பாரம்பரிய அனுஷ்டானங்களுடன் மட்டுமே தொடர்புடைய ஒரு நிகழ்வாகும். பக்தர்கள் கூடி இந்தப் புனித நிகழ்வைக் கண்டு, முருகப் பெருமானைப் போற்றி, “அரோகரா” என்ற பக்தி முழக்கத்தை எழுப்புகின்றனர்.

இந்த ஆண்டின் கந்த சஷ்டி கொண்டாட்டங்களின்போது, திருச்செந்தூரில் நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகப் பெருமானைப் போற்றுவது மட்டுமின்றி, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோரையும் போற்றி, “அரோகரா” என்ற பக்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

இதனைப் பாடகர்கள் வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் இணைந்து “அரோகரா” என முழக்கமிட்டனர்.

“அரோகரா” என்ற முழக்கம், முருகப் பெருமானின் மீதான பக்தியால் கடவுளைப் போற்றி எழுப்பப்படும் முழக்கமாகும். இந்த நிகழ்வின்போது, அரசியல் பதவி வகிப்பவர்களைப் புகழ்வதற்காக வேண்டுமென்றே இந்த முழக்கம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அது மத நம்பிக்கையைச் சீர்குலைப்பதற்குச் சமமாகும்.

எந்தவொரு அரசியல் தலைவர் அல்லது பொதுப் பதவி வகிப்பவரின் அரசியல் விளம்பரத்திற்கோ, தனிப்பட்ட புகழுக்கோ அல்லது கட்சி சார்ந்த முன்னிலைப்படுத்தலுக்கோ கோயில் நிகழ்வுகள் ஒரு மேடையாக மாற அனுமதிக்கக் கூடாது.

எனவே, சூரசம்ஹாரம் நிகழ்வு தொடர்பாக, அந்நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள் கோயில் நிர்வாகம் அல்லது துறையால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டனரா, அந்நிகழ்ச்சி தகுதிவாய்ந்த அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டதா, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் ஏதேனும் அரசியல் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருந்தனவா, இவர்களுக்காகக் கோயில் நிதி செலவிடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

சூரசம்ஹாரம் நிகழ்வு தொடர்பான முழுமையான அசல் காணொளிப் பதிவுகள், சிசிடிவி (CCTV) காட்சிகள், ஒலிபெருக்கி அமைப்பு பதிவுகள், ஆடியோ பதிவுகள், நிகழ்ச்சி நிரல்கள், அழைப்பிதழ்கள், அனுமதிகள், கடிதப் போக்குவரத்துகள், ஈடுபாட்டுப் பதிவுகள், செலவு அறிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை, நிகழ்வுகளின் உண்மையான வரிசையையும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருப்பின் அதையும் தீர்மானிப்பதற்கான முக்கியச் சான்றுகளாகும் என்பதைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

மத மேடைகள் மற்றும் கோயில் திருவிழாக்களை அரசியல் விளம்பரத்திற்குப் பயன்படுத்துவது பக்தர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தாவிட்டால், இச்சம்பவம் ஒரு முன்னுதாரணமாக அமைந்து, மற்ற கோயில்களிலும் இதேபோன்ற நிகழ்வுகள் தொடர்வதற்கு வாய்ப்புள்ளது.

கோயில்கள் வழிபாடு மற்றும் ஆன்மிக அனுஷ்டானங்களுக்கான இடங்களாகவே இருக்க வேண்டும். மேலும், பக்தர்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி கட்சி சார்ந்த அல்லது தனிப்பட்ட புகழைப் பெறுவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.

எனவே, திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போது முழக்கமிட்ட நபர்கள் மீதும், அவர்களுக்குத் துணைபோன இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதச் சடங்குகளும் கோயில் திருவிழாக்களும் அரசியல் புகழுக்கான மேடைகளாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், கோயில் நிர்வாகம் அத்தகைய நிகழ்வுகளின் மத நோக்கத்தையும் பாரம்பரியத் தன்மையையும் பராமரிப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.