அமெரிக்காவில் அரசுத் துறைகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்து வருகின்றன. வங்கிகள், தேசிய பாதுகாப்பு முகமை (NSA), மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பாதிப்புகள் ஏற்கெனவே கவனத்தைப் பெற்றுள்ளன. இதற்கிடையே, FBI-யின் முக்கியமான குற்றத் தகவல் தரவுத்தளமும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
FBI-யின் குற்றத் தகவல் தரவுத்தளம் ஹேக் செய்யப்பட்டதா?
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI, நாடு முழுவதும் உள்ள குற்றத் தகவல்களைப் பராமரிக்கும் தனது தரவுத்தளத்தில் சந்தேகத்திற்குரிய சைபர் ஊடுருவல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. FBI நிர்வகிக்கும் தேசிய குற்றத் தகவல் மையம் (National Crime Information Center – NCIC), அமெரிக்கா முழுவதும் உள்ள மத்திய, மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையிலான முக்கிய இணைப்பாகச் செயல்படுகிறது.
இந்தத் தரவுத்தளத்தில் கைது வாரண்டுகள், குற்றப் பின்னணி விவரங்கள் மற்றும் பின்னணி சரிபார்ப்புகள் தொடர்பான தகவல்கள் சேமிக்கப்பட்டு, பல்வேறு காவல்துறை அமைப்புகளுக்கு இடையே பகிரப்படுகின்றன. இந்நிலையில், இந்தத் தரவுத்தளத்தில் சைபர் ஊடுருவல் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் FBI சைபர் தாக்குதலுக்கு உள்ளாவது இது இரண்டாவது முறையாகும்.
சைபர் பாதுகாப்பு குறித்து FBI இயக்குநர் பேட்டி!
கடந்த நவம்பர் 19-ம் தேதி வியாழக்கிழமை, FBI இயக்குநர் காஷ் படேல் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அந்த அமைப்பின் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது, சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றை அவர் சுட்டிக்காட்டினார். அதில், நிறுவனங்கள் தங்களது கணினி அமைப்புகளைப் புதுப்பித்து, ஹேக்கர்களிடமிருந்து முக்கியமான தரவுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், FBI அதிகாரிகளுக்கு சமீபத்திய சைபர் பாதுகாப்பு சம்பவம் குறித்த தகவல் கிடைத்த பிறகே இந்தப் பேட்டி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஊழியர்களின் தகவல்கள் திருட்டு!
இதற்கு முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் FBI-யின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் ஊடுருவல் நடைபெற்றது. இதன் மூலம் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் தொடர்பான ஏராளமான முக்கியத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தரவுத் திருட்டு தொடர்பான செய்தி கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியானது.
இதற்கிடையே, அமெரிக்காவில் வங்கிகள், தேசிய பாதுகாப்பு முகமை (NSA), விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் அடுத்தடுத்து தொழில்நுட்பப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த வாரம் மைக்ரோசாப்ட் சேவைகளில் ஏற்பட்ட உலகளாவிய முடக்கத்தால் கோடிக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சைபர் சம்பவங்கள் அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகமும் இந்த விவகாரத்தில் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.




