கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தொண்டர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கர்நாடக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போதே காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான காட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். அதில் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 28ம் தேதி மண்டியா
மாவட்டத்தில் உள்ள பெவினஹள்ளியில் நடைபெற்ற ‘மக்களின் குரல்’ பேரணியில் கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது உற்சாகமூட்டும் வகையில் காங்கிரஸார் மலர்களை தூவி அவரை வரவேற்றதோடு, மேளக் கலைஞர்களும், மேள தாளங்கள் முழங்க இசையமைத்து கொண்டாடினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த டி.கே.சிவகுமார் தேர்தல் பிரச்சார வேனில் இருந்தபடியே 500 ரூபாய் நோட்டுகளை தொண்டர்கள் மீதும், மேளக் கலைஞர்கள் மீதும் வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து மண்டியா மாவட்டத்தின் ஆட்சியர் கோபால கிருஷ்ணா வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பெயரில் போலீஸார் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்தனர். மேலும் இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசும் போது “காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மக்களை எப்படி நடத்துகிறார் என்பதற்கு இதோ இதுவே ஒரு சிறந்த உதாரணம். கலைஞர்கள் மீது அவர் எப்படி பணத்தை வீசுகிறார் என்பதைப் பாருங்கள். கர்நாடக மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் கனகபுரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் கர்நாடகவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல்வராகும் வாய்ப்பு இவருக்கே இருந்து வரும் நிலையில், இந்தவழக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








