குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் , கறம்பக்குடி அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகா ஆத்தங்கரை விடுதி , கீழ வாண்டான்…

புதுக்கோட்டை மாவட்டம் , கறம்பக்குடி அருகே குடிநீர் வழங்கக் கோரி
பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகா ஆத்தங்கரை விடுதி ,
கீழ வாண்டான் விடுதி கிழக்குத் தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
வசித்து வருகின்றன. இந்நிலையில், அங்கு செயல்பட்டு வந்த 10,000 லிட்டர்
கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஆழ்குழாய் மோட்டார் ,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த நிலையில் , ஊராட்சி நிர்வாகம்
அந்த குழாய்களை சீரமைக்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும்
எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கப்படவில்லை . இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த
கிராம மக்கள் அருகே உள்ள கிராமத்தில் குடிநீர் எடுத்து வருகின்றனர். தற்பொழுது
வெயில் காலம் என்பதால் அந்த கிராமத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் , இரு கிராமத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்படுவதாகவும்
கூறப்படுகிறது.

மேலும், குடிநீர் இல்லாமல் தங்களது குழந்தைகளை பள்ளி கல்லூரிகளுக்கு
அனுப்புவதற்கு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த
அப்பகுதி பெண்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் , குடிநீர்
பிரச்னையை போக்கிட கோரியும் காலி குடங்களுடன் புதுப்பட்டியில் திடீர் சாலை
மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கறம்பக்குடி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் ,
அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து
கலைந்து சென்றனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.