முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி., ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பரப்புரைகள் அதிகரித்து வரக்கூடியநிலையில் கடந்த 26ம் தேதி, ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் எழிலனை ஆதரித்து அக்கட்சியின் எம்.பி., ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமியையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும், இதில் பிரதமர் மோடி குறித்தும் பேசியுள்ளதாகவும், இவரின் கருத்துக்கள் அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகவும் அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் அளித்திருந்தனர்.

அதிமுகவினரின் புகாரினைத் தொடர்ந்து ஆ.ராசா மீது ஆபாசமாக பேசுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தான் அவதூறாக பேசவில்லையென்றும், தன்னுடைய கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளது என்றும் ஆ.ராசா விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







