போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய முன்னாள் முதலமைச்சர் ஓ.
பன்னீர்செல்வத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய வழக்கை தள்ளுபடி செய்து
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதால்,
தனக்கு பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது.
மேலும் இதுதொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு
உத்தரவிடக் கோரி அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜா ராம், சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், தனி பாதுகாப்பு போலீசாரின் உதவியுடனேயே அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், தற்போது அரசியலிலும், கட்சியிலும் எந்த
பொறுப்பிலும் இல்லை எனவும், அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீதும் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓபிஎஸ்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எந்த முகாந்திரமும் இல்லாமல்,
ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி
செய்து உத்தரவிட்டுள்ளார்.
-இரா.நம்பிராஜன்








