ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு

நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் கதை எங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவம் என்றும், இதனை திரைப்படமாக எடுக்க தாம் எண்ணி இருந்ததாகவும், தாம் எழுதி வைத்திருந்த இக்கதையை திருடிவிட்டதாகவும், இதுதொடர்பாக காவல்துறை …

நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் கதை எங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவம் என்றும், இதனை திரைப்படமாக எடுக்க தாம் எண்ணி இருந்ததாகவும், தாம் எழுதி வைத்திருந்த இக்கதையை திருடிவிட்டதாகவும், இதுதொடர்பாக காவல்துறை  முழுமையான விசாரணை நடத்தி காப்புரிமை மற்றும் அறிவு சொத்துரிமை பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குளஞ்சியப்பன் என்பவர் சென்னை மாநகர நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதி நடக்கவுள்ளது.

ஜெய் பீம் திரைப்படமானது இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படமாகும். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது 2டி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் 2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ல் ‘அமேசான் பிரைம் வீடியோ’ இணையதள ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜெய் பீம்  கதை 

காவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக சில வழக்குகளை மலை அடிவார மக்கள் மற்றும் அவர்களது சமூகத்தினரின் மீது சுமத்தி வழக்குகளை முடிக்கின்றனர். காவலர்களால் பாதிக்கப்பட்ட மலை அடிவார மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி தீர்ப்பை வழங்குகிறார், நாயகன் சூர்யா. இப்படம் 1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் பாரி கூறியதாவது, எனது கட்சிகாரர் குளஞ்சியப்பன் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இவரது மாமா ராஜகண்ணு, அத்தை பார்வதி, அவரது அண்ணன் குள்ளன், சின்ன மாமா கோவிந்தராஜ் ஆகியோர் மீது  கடந்த 1993ஆம் ஆண்டு காவல்துறை பொய் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் அந்த குடும்பம் எப்படி மீண்டு வந்தது என்பதே ஜெய் பீமின் கதையாகும். அந்த படத்தில் சைக்கிள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட கதாபாத்திரம் வேறு யாருமல்ல. எனது கட்சிகாரர் குளஞ்சிதான் என்கிறார்.

மேலும், இவரிடம் என்ன நடந்தது என இயக்குனர் ஞானவேல் மற்றும் அவரது குழுவினர் நேரில் சென்று கதையை கேட்டுள்ளனர். அப்போது நடந்த சம்பவங்களை தாம் ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். உடனே அந்த நோட்டை வாங்கி கொண்ட ஞானவேல் இதனை திரைப்படமாக எடுக்கவுள்ளதாகவும், இந்த கதைக்காக ஒரு கோடி ரூபாய் கொடுக்க தயாராகவுள்ளதாகவும், படம் வெளியான பின்னர் லாபத்தில் 20 சதவீதம் தருகிறேன் எனக்கூறியுள்ளனர். ஆனால் கொடுத்த வாக்குப்படி அவர்கள் நடக்கவில்லை.

இதனை எதிர்த்து சென்னை சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் 2டி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள் நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் மற்றும் திரைப்படத்தினை ஓடிடியில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்தினர் மீது முதலில் புகார் கொடுத்தோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தோம். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது சென்னை சைதாபேட்டையில் உள்ள மாநகர நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கானது வரும் 15ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது என்றார்.

இராமானுஜம்.கி

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.