ஒரு திரைப்படத்தை வேறு மொழியில் அதன் சுவை குன்றாமல் ரீமேக் செய்வது எளிதான காரியம் அல்ல. அவ்வாறு பான் இந்தியா படங்களுக்கு நடுவில் உள்ளூர் நகைச்சுவை உணர்வுகளுடன் இந்திப் படமான ‘பதாய் ஹோ’ தமிழில் ‘வீட்ல விஷேசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர்.
ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றுபவர் சத்யராஜ், அவரது மனைவி ஊர்வசி. இவர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி, விஸ்வேஸ் என இரு மகன்கள். இளங்கோவாக வரும் ஆர்.ஜே.பாலாஜி தனியார் பள்ளி ஆசிரியர். இவர்கள் அனைவரும் ரயில்வே காலணியில் உள்ள வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
திடீரென ஒருநாள் வயிற்று வலி என மருத்துவமனை செல்கிறார் ஊர்வசி. அங்கே அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். குழந்தையை பெற்றுக்கொள்வது என்ற தீர்க்கமான முடிவை எடுக்கிறார் ஊர்வசி. இதனை மகன்களிடம் எப்படி சொல்கிறார்கள், இருவரும் பெற்றோரின் முடிவை ஏற்றுக்கொள்கிறார்களா, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்பதே மீதிக்கதை.
இந்த ரீமேக்கின் சிறந்த விஷயம் என்னவென்றால், அசல் கதையுடன் ஒப்பிடுகையில் சிறிய மாற்றங்களைத் தவிற பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரீமேக் வெர்ஷனில் நமது அன்றாட வாழ்க்கையில் பேசப்பட வேண்டிய பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இந்த படத்தில், RJ பாலாஜி ஒரு உயிரியல் ஆசிரியராக நடித்துள்ளார். அவர் தனது மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்பிக்க ஆர்வமாக இருப்பார். ஆனால் தனது அம்மா 50 வயதில் கர்ப்பமானதை அவரால் ஜீரணிக்க முடியாது.
RJ பாலாஜி, தன் பெற்றோருக்குக் குழந்தை பிறக்கப் போவதை ஏற்க முடியாமல் “அப்பா அம்மா பண்ற வேலையா இது?” என்ற கேள்வியை எழுப்புவார். வீட்ல விஷேஷம் படத்தில் அபர்ணாவுடன் அவர் நடித்த அந்தரங்கக் காட்சிகளைப் பார்த்து, “ஆர்.ஜே.பாலாஜி பண்ற வேலையா இது?’என்று நமக்கு கேட்க தோன்றுக்கிறது. ஆனாலும், RJ பாலாஜி தனது காதல் பக்கத்தை திரையில் காண்பிப்பது புத்துணர்ச்சியாகவே இருந்தது.
சத்யராஜ் ஊர்வசியிடம் கர்ப்பை கலைத்துவிடலாம் என்று கூறுகையில் ஊர்வசி, பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்ற முடிவை ஏன் மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள். பெண்களால் முடிவு எடுக்க முடியாதா, பெண்களுக்கு மனதில்லையா, ஏன் 50 வயதில் பெண்கள் குழந்தை பெறக்கூடாதா என்ற கேள்வியை முன்வைக்கிறார். அப்போது வலி தாங்கப் போவது பெண்கள் தான், என்ன செய்ய வேண்டுமென்று அவர்களே முடிவெடுக்கட்டும்… நான் குழந்தையை பெறலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன் என்ற காட்சி வலிமை நிறைந்தது.
பின் அவர்கள் இந்த விஷயத்தை தன் அம்மா மற்றும் மகன்களிடம் கூற எடுக்கும் முயற்சிகள் அட்டகாசம். அபர்ணா பாலமுரளி, ஆர்.ஜே.பாலாஜி பணிபுரியும் தனியார் பள்ளியின் நிர்வாகி. இருவரும் நீண்ட வருடங்களாக காதலிக்கின்றனர். தன் தாய் கர்பமாக இருப்பதால் அனைவரும் கேலி செய்வார்கள் என்று எண்ணி நண்பர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பார் ஆர்.ஜே.பாலாஜி. அப்போது அபர்னா கூறும் அட்வைஸ் ஒட்டுமொத்த ஆண்களுக்குமானவை. அபர்னாவின் வலுவான கதாப்பாத்திரம் இக்கதைக்கு பொருத்தமானது.
படத்தின் க்ளைமாக்ஸின் போது, பிரசவநேரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசியின் காட்சிகள் நகைச்சுவை கலந்த செண்டிமெண்ட். பார்வையாளர்கள் கண்ணீரை விட்டுவிட்டு, நிறைய உணர்ச்சிகளை மனதில் கொண்டு வீடு திரும்புகின்றனர்.
கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையானது நகைச்சுவை மற்றும் நாடகக் காட்சிகளை உயர்த்த உதவுகிறது. இருப்பினும், சில உணர்ச்சிகரமான காட்சிகளின் போது ‘மெகா-சீரியல்’ பார்ப்பது போன்றுள்ளது. எமோஷன் காட்சிகளை இன்னும் நுட்பமாக அனுகி பார்வையாளர்களிடம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும் ஆர்.ஜே.பாலாஜியும் சரவணனும் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இப்படத்தில் பெரிதாக எந்த ஒரு ஆச்சரியமான அம்சமும் இல்லாததால், சில திருப்பங்களுடன் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தோன்ற வைக்கின்றது. இருப்பினும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள நகைச்சுவை படம் என்பதால் இப்படம் எல்லோர் வீட்டிலும் ஒரு விஷேசம் தான். நிச்சயம் ஆண்கள் பார்த்து பெண்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டிய படம்







