சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர் தனது குடும்பத்தினருடன் வேலூர் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்க இன்ஜினில் இருந்து திடீரென புகை வெளிப்பட்டது.
உடனடியாக காரில் இருந்து அனைவரும் வெளியேறினர். இதையடுத்து கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இச்சம்பவத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– ம. ஶ்ரீ மரகதம்







